நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நேற்று (19) நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கலந்து கொள்ள வைப்பதற்காக அரச தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அந்த நிகழ்வில் சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சியை ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்ய அரசாங்க தரப்பில் அக்கறை காட்டப்பட்டாகவும் சிங்கள இணையத்தளமொன்று குறிப்பிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை தொடர்புகொண்டு அவர் நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த அரசாங்க தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இவற்றுக்கு பொன்சேகா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பதிகாரியான ரொஹான் வெலிவிட்ட , நேற்றைய தினம் சரத் பொன்சேகாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அரசியல் நண்பர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, “பீல்ட் மார்ஷல் ஒருவர் எப்போதும் லெப்டினட் கேர்ணல் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்த மாட்டார்.
நான் அந்த நிகழ்விற்கு செல்ல மாட்டேன்” எனக் கூறியதாக பொன்சேகாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்