ஹோமாகமையில் புதிய மைதானம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட தருணம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
விளையாட்டுத்துறைக்கான அபிவிருத்திக்காக அடித்தளக் கட்டமைப்புக்கள் இன்றியமையாதவை.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் அந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எந்தவொரு இறுதித்தீர்மானத்தை எடுக்கும் முன்னரும் அது சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தொடர்ந்தும் விமர்சனம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே நாமல் ராஜபக்சவின் கருத்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 10-15 வருடங்களில் உலகக் கிண்ணப்போட்டிகளை நடத்துவதற்காக 40 மில்லியன் டொலர்களில் மைதானம் அவசியம் இல்லை என்பதே மஹேலவின் கருத்தாக உள்ளது.
அத்துடன் உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இலங்கை தெரிவுசெய்யப்படுமானால் அதன்போது மைதானக் கட்டமைப்புக்காக சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திடம் நிதியுதவியைக் கோரமுடியும் என்றும் மஹேல சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மஹேல ஜயவர்த்தன முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளமையால் அது தொடர்பில் தீவிரமாக ஆராயவேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.