பாராளுமன்றத்தை மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று கலைத்தமை மற்றும் பொதுத் தேர்தலுக்கான திகதியை ஜூன் 20ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தமை ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட மனுக்கள் 19ஆம் திகதியன்றும் விசாரிக்கப்பட்டன.
அதன்பின்னர் 20ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 21ஆம் திகதியன்றும் நடத்தப்பட்டன. நாளை 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்தமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
அதனையடுத்தே, பாராளுமன்றத் தேர்தலை 20 ஆம் திகதியன்று நடத்துவதற்கு எதிராக தமது தரப்பினாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
அவர், சட்டத்தரணி ஷரித குணரத்னவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
“தனது தரப்பு மனுதாரர் ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தல் நடத்துவதை கைவிடுமாறு கோரியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவும் அந்த முடிவுக்கு வந்துள்ளது. தனது தரப்பு மனுதாரர் கோரியிருக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது. ஆகையால் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் கோரியுள்ளேன்” என்றும் நீதிமன்றத்துக்கு சுமந்திரன் அறிவித்துள்ளார்.