உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடாத்துவதற்காக அங்கு வந்த குண்டுதாரி 32 வங்கிக் கணக்குகளை வைத்திருந்தார் என, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று தெரியவந்தது.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் யசாஸ் ஸ்வர்ண கீர்த்திசிங்க குறித்த ஆணைக்குழுவின் முன் குறிப்பிடும்போது, கிங்ஸ்பரி தாக்குதல் நடத்தியவர் ஸஹ்ரான் ஹாஷிமின் வாகன ஓட்டுநர் எனக் குறிப்பிட்டார்.
கிங்ஸ்பரி ஹோட்டலின் பாதுகாப்புப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் மாஅதிபர் ஐவன் தம்மிக்க துடுவத்த நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டார்.
குறித்த சாட்சியாளர் ஆணையகத்தின் முன் மேலும் குறிப்பிடுகையில் கடந்த வருடம் ஏப்ரல் 17 ஆம் திகதியன்று, ஹோட்டலுக்கு வந்த ஒருவர் "அப்துல்லா அப்துல்லா" என்ற பெயரில் ஓர் அறையை முன்பதிவு செய்து, 20 ஆம் திகதி வருவதாக கூறி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இன்று விசாரணை நடாத்தியவர் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமைப் பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க ஆவார்.
ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் முஹம்மது அஸாம் முஹம்மது முபாரக் என்று முன்னர் அவர் ஆணைக்குழுவிடம் கூறியிருந்தார்.
தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு, அவர் ஒரு சிவப்புக் காரில் ஹோட்டலுக்கு வந்ததாகச் சாட்சியமளித்த அவர், சி.சி.டி.வி காட்சிகளை ஆணைக்குழுவின் முன்னர் காண்பித்தார். குறித்த குண்டுதாரி ஹோட்டலின் வரவேற்பாளர்களிடம் சென்று மூலையில் உள்ள கவுண்டரில் தகவல் பெறுவது போன்று செயற்பட்டிருப்பதற்கான காரணம் அவர்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே எனவும் அவர் சாட்சியமளித்தார்.
அவர் ஹோட்டலுக்கு வரும்போது அவரிடம் வெடிபொருள் ஏதேனும் இருந்ததா? என ஆணைக்குழு விசாரித்தபோது, குறித்த குண்டுதாரி ஹோட்டலுக்கு வரும்போது அவரிடம் வெடிபொருள் இருந்திருக்கலாம் எனவும், அவர் ஹோட்டலுக்கு வரும்போது எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் குறித்த குண்டுதார் ஹோட்டலின் எட்டாவது மாடியில் அமைந்துள்ள அறை ஒன்றிற்குப் போனாதாக சாட்சியாளர் சாட்சியமளித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அன்றிரவு 8.59 மணியளவில் குண்டுவெடிப்பு ஹோட்டலில் இருந்து புறப்படுவதாகவும், ஹோட்டலுக்கு அவர் கொண்டு வந்த பைக்குக்குப் பதிலாக வேறொரு பையை குறித்த நபர் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், குறித்த குண்டுதாரி காலி முகத்திடல் பக்கமாகச் சென்று, வாடகை வாகனம் ஒன்றில் ஏறி, கொலன்னாவையிலுள்ள பிரபல வியாபார நிலையம் ஒன்றிற்கு இரவு 9.25 மணியளவில் சென்றிருப்பதாகவும் யஸஸ் சுவர்ண கீர்த்திசிங்க தெரிவித்தார்.
அவர் கடையில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு, கொலன்னா - ஜயந்தி மாவத்தையில் உள்ளத தனது வாடகை வீட்டுக்குச் சென்றுள்ளார். இதற்கு முன்னர் குறித்த குண்டுதாரி கிராண்ட்பாஸ், பாணந்துறை, மட்டக்குளி, தெமடகொட போன்ற இடங்களில் வாடகைக்கு இருந்துள்ளார். குண்டுதாரி தனது வாடகை வீட்டில் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்ததாகவும், கருப்பு கைப்பையுடன் மீண்டும் கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு திரும்பி வந்ததாகவும் சாட்சி கூறினார்.
குண்டுதாரி முதன்முதல் கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு வருவதற்கு முன்னர் பாணந்துறையில் பாதுகாப்பான வீடொன்றில் வேன் ஒன்றையும் வாடகைக்குப் பெற்றிருந்தார் எனவும் சாட்சியமளித்தார் திரு. யஸஸ்.
இந்த குண்டுத் தாக்குதலை நடாத்துவதற்கு குண்டுதாரிக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது, அதற்குப் பதலளிக்கும்போது, குண்டுதாரியின் பெயரில் 32 வங்கிக் கணக்குகள் இருந்தன என்பது தெரிய வந்துள்ளது. அவர் தொழில் ரீதியாக ஒரு சப்பாத்துக் கடையை நடாத்தி வந்துள்ளார். மேலும் அவர் பலருக்கு 2018 முதல் கடன்பட்டுள்ளார். அதனால் அவர் தலைமறைவாக சிறிது நேரம் செலவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஸஹ்ரானின் குண்டுவீச்சுத் தாக்குதலுடன் இவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என ஆணைக்குழு வினவியபோது, குறித்த குண்டுதாரி முன்னர் ஸஹ்ரானின் வேன் ஓட்டுநராகச் செயற்பட்டுள்ளார். அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 14 தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியுள்ளார் எனவும்,அவரின் பெயரில் 11 ஸிம் கார்ட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வெடிப்பின் ஒத்திகையிலும் குண்டுதாரி பங்கேற்றதாக யஸஸ் ஸ்வர்ண கீர்த்திசிங்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.