தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மற்றும் அவருடைய மகள் ஆகிய இருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகினறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழே இவர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அவருடைய மகள், அமெரிக்காவிலிருந்து அண்மையில் நாடு திரும்பினார். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்தின் வாகனத்தின் மூலமாக கொழும்பு திரும்பிய ஹூல், தன்டைய மகளையும் அழைத்துகொண்டு, இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார்.
அங்கு பணியாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து தன்னுடைய மகளுடன் ஹூல் வெளியேறிவிட்டார்.
அதன்பின்னர் தேர்தல் செயலகத்துக்கு கிருமித்தொற்று தெளிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவ்விருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.
இல்லையேல் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.