முதுகில் குத்துபவர்களுக்கு தான் அனுபவம் தேவை. மக்களுக்கு சேவையாற்றுவோருக்கு அனுபவம் தேவையில்லை என எனது தந்தை என்னிடம் தெரிவித்தார் என்று தனது நன்றியுரையில் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மகன், ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு என்ன நடக்கும் என்று பலரிடம் சந்தேகம் ஏற்படலாம்.
இருட்டை கண்டு பயப்பிடாதீர்கள், இருளடைந்து விடியும் போது சூரியன் உதிக்கும் அதேபோல் சேவலும் கூவும் என்றார். மறைமுகமாக ஓர் உந்துசக்தியை மலையக மக்களின் மனதில் விதைத்து சென்றிருக்கின்றார்.
'மலையகம் தொடர்பில் எனது தந்தை வைத்திருந்த கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என, அவரின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வில் மக்களுக்கு நன்றி உரை ஆற்றுகையில் அவர் இதனை கூறினார்.
அவர் தெடர்ந்து கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்கு தகுதியான இறுதி அஞ்சலியை செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்.
பல்கலைக்கழகம், வீட்டுத்திட்டம் உள்ளிட மலையகம் தொடர்பில் பல்வேறு கனவுகளுடன் தந்தை இருந்தார். கிராமங்களை உருவாக்க நினைத்தார். ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை தொடர்பில் இறுதிவரை பேசினார்.
அவரின் கனவுகளை நிறைவேற்றுவது எனது பொறுப்பு. எனக்கும் அனுபவம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். இதனை நான் முன்னர் என் தந்தையிடம் கேட்டேன், முதுகில் குத்துவதற்கு தான் அனுபவம் தேவை, மக்களுக்கு சேவை செய்ய இல்லை என்று என்னிடம் கூறினார். அவர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.
இத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிடும் என்று நினைப்பவர்களுக்கும், அச்சத்தில் உள்ள மக்களுக்கும் ஒன்று கூறுகின்றேன்.
இருட்டை பார்த்து பயப்படவேண்டாம். காலையில் சூரியன் உதிக்கும், சேவல் நிச்சயம் கூவும்” என்றார்.