web log free
December 23, 2024

மக்கள் உயிரிழக்கும் அபாயம்- ரணில் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரிடும். என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

ஏனைய உலக நாடுகள் வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் இலங்கையில் மாத்திரமே அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதற்கான கலந்துரையாடலே இன்று கட்சி தமைமையகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றம் செயற்படாமல் ஆட்சி இடம்பெறுவது என்பது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். அதனால் விரைவில் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றம் அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது நாங்களும் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம்.

கொரோனா நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி இருப்பதுடன், மக்களது வாழ்வாதாரத்துக்கும் சவால் ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் ஊதியம் பெருபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினர் இன்று வருமானம் இன்றி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏனைய காலங்களையும் விட நாட்டின் வருமானம் பெருமளவு வீழ்சியடைந்துள்ளது. மொத்த தேசிய உற்பத்தியும் ஒன்பது சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வைரஸ் பரவல்காரணமாக வழங்கப்படும் நிவாரணங்களை அரசியல் செயற்பாடுகள் இன்றி வழங்குமாறே தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. நிவாரணங்களை வழங்கவேண்டாம் என்று கூறவில்லை.

ஏனைய உலக நாடுகளை பொருத்தமட்டில் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் இலங்கையில் மாத்திரமே பொருட்களின் விலை பாரியவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவதாக தெரியவந்துள்ள போதிலும் அரசாங்கம் அந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்து வருகின்றது.

இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும் , வறுமையின் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரிடும். அதன் உண்மை தகவல்களை வெளியிடப்பட்டு , மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd