இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகம் தொண்டமானின் புதல்வி கோதைநாச்சியார் தொண்டமான் ஓர் மருத்துவராவார். ஓமான் மஸ்கட் நகரில் சேவையாற்றி வருகிறார். தனது தந்தை உயிரிழக்கும் போதும் அவர் மஸ்கட் நகரிலேயே இருந்துள்ளார்.
தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு வந்திருந்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அதற்கு தடையாக இருந்துள்ளது.
இறுதியாக கோதை நாச்சியார் மஸ்கட் நகரில் PCR பரிசோதனையின் பின்னர் விமானம் மூலம் இந்தியாவின் கோழிகோடுக்கு வந்துள்ளார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கூறிய அவரை உறவினர்கள் தனியார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
எனினும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் மகள் கலந்துகொள்ள சந்தர்ப்பத்தை வழங்குமாறு குடும்ப உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தொண்டமானின் இறுதிச் சடங்குகளை வீடியோ தொழிநுட்பம் மூலம் அவர் கண்ணுற்றார்.
தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததன் பின்னர் அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து கொள்வார்.