web log free
December 23, 2024

பி.சி.ஆர் பரிசோதனையை திருத்தியது அரசாங்கம்

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர்பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள்

 

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்த்து, குறைக்கும் முகமாக, கொழும்பிலுள்ள / இணைக்கப்பட்ட இராஜதந்திரத் தூதரகங்களின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது / மீண்டும் விஜயம் செய்யும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தினால் 2020 ஜூன் 4 ஆந் திகதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, அதனை அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதித்துவ அலுவலகங்கள் மற்றும் அதன் சிறப்பு முகவரமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், கொழும்பிலுள்ள உதவித் தூதரகங்களுக்கு இராஜதந்திர வழியமைப்புக்களினூடாக தெரிவிப்பதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
 
திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
 
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, இராஜதந்திரப் பணிகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு / மீண்டும் விஜயம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை வாய்மொழிக் குறிப்பொன்றின் மூலமாக குறித்த இராஜதந்திரத் தூதரகங்கள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சிற்கு முன்கூட்டியே தெரிவித்தல் வேண்டும்.
 
  • குறித்த நாடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன்னரான 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை இராஜதந்திர ஊழியர்களின் உறுப்பினர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சமர்ப்பித்தல் வேண்டும்.
 
  • இராஜதந்திர ஊழியர்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை வழங்க முடியாதவிடத்து, கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் கட்டாயமான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
 
  • தூதரகத்தின் தலைவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தமது உத்தியோகபூர்வ வதிவிடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். விஜயம் செய்யும் ஏனைய அனைத்து தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும், தூதரகத் தலைவர்களின் ஒத்திசைவு மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்ட வகையில், இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் ஹோட்டலொன்றில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும் (சுயாதீனமான / தனியான குடியிருப்புக்கள் கிடைக்காதவிடத்து).
 
  • 14 நாள் வீட்டுத் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததும், வெளிநாட்டு உறவுகள் அமைச்சிற்கு அது குறித்து இராஜதந்திரத் தூதரகங்கள் / பணிமனைகள் அறிவிக்க வேண்டியதுடன், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பதற்காகவும் தூதரகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமைய, குறித்த அதிகாரி தூதரகத்தில் தனது கடமைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தூதரகம் மேற்கொண்ட இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
 
  • தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிரயாண விவரங்களை அவர்கள் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக அமைச்சின் உபசரணைப் பிரிவின் தலைவருக்கு இராஜதந்திரத் தூதரகங்கள் / பணிமனைகள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
 
 
இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள மேற்படி நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான அவர்களது அங்கீகாரத்துக்கு உட்பட்ட வகையில், இராஜதந்திர அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மேலும் குறிப்பிடுகின்றது.
Last modified on Saturday, 06 June 2020 11:17
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd