web log free
March 28, 2024

விசாரணைகள் துரிதமாக முன்னெடுப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் தொடர்புகளை பேணிவந்த நபர்கள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 25 பேரில் 7 பேர் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 4 பேர் கம்புருபிட்டி பிரதேசத்தையும், இருவர் வெலிகமை பிரதேசத்தையும், ஒருவர் கந்தர பிரதேசத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

டுபாயில் கைதான, ஜங்கா எனப்படும் அனுஷ்க கவிஷாலின் மாத்தறை - கந்தரை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கித் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து 18 இராணுவ சீருடைகளும், டீ56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 23 தோட்டக்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஜங்காவின் 82 வயதான தாத்தா கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஜங்காவிற்கு, குறித்த இராணுவ சீருடைகளை வழங்குவதற்காக, உதவி புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் அநுராதப்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மாகந்துரே மதூஷின் டுபாயில் உள்ள மனைவி திலானி நிஷாயா திலகரத்னவிற்கு சொந்தமான கார் ஒன்று பாதுக்கை போரேகெதர பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு பேரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டுபாயில் கைது செய்யப்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் உள்ள விருந்தக உரிமையாளரான சன்சைன் சுத்தாவின் விருந்தகத்தில் இருந்து நடிகர் ரையன் வேன் ரூயன் பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி காணொளிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.