web log free
December 24, 2024

சஹ்ரானின் சகோதரர் குறித்த பகீர் தகவல்

சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசிம் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த வைத்தியர் அந்த காயங்கள் தொடர்பில் சந்தேகம் தெரிவித்தாக, கொழும்பு நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

அது குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதும் அவர்களின் கவனயீனத்தால் ரில்வான் ஹாசிம் நீதிமன்ற வைத்தியர்களிடம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நேற்று (12) கொழும்பு நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் சாட்சியமளித்தார்.

2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்து சஹாரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசிம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றின் மூலம் அறிந்துக்கொண்டதாக நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தெரிவித்தார்.

அந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த ரில்வான், எம்.ஐ. சாஹித் என போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.ஐ. சாதிக் என்பவர் தெல்கஹகொட ஹிங்குலவில் வசிப்பவர் எனவும் நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தனது சாட்சியில் தெரிவித்தார்.

ரில்வான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எந்த வகையான காயங்கள் ஏற்பட்டதை அவதானித்தீர்கள் என ஆணைக்குழு அஜித் தென்னகோனிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் ரில்வான் ஹாசிமின் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் பல விரல்கள் துண்டாகி இருந்தாகவும் அவரது இடது கண்ணிலும், நெற்றியின் இடது பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்ததை அவதானித்தாகவும் கூறினார்.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கூறியிருந்தாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ரில்வானை பரிசோதித்த வைத்தியர்கள் அனைவரும் அவர் விபத்தினால் காயமடைந்தாக தெரிவிக்கவில்லை எனவும் மருத்துவ அறிக்கையிலும் கேள்விக்குறியை பதிவு செய்திருந்தாகவும் மருத்துவ அறிக்கையை ஆராயும் போது அதன் மூலம் அறிந்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரில்வான் தற்கொலை செய்துக்கொண்டதன் பின்னர் அவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.

அதன்போது ரில்வானின் விரல்கள் சிகிச்சைக்கு பின்னர் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மற்றும் அவரது கண்ணில் ஏற்பட்ட காயம் குறித்தும் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.

இதை அடுத்து 2018 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பந்துல நானாயக்கரா ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

ஆணைக்குழு அவரிடம் எம்.ஐ.சாஹித் குறித்து வைத்தியசாலை பொலிஸார் எவ்வகையான கடமைகளை முன்னெடுத்தனர் எனவும் அதில் வைத்தியசாலை பொலிஸாரின் பங்கு என்னவும் வினவியது?

அதற்கு அவர் தான் எம்.ஐ.சாஹித் தொடர்பில் எந்தவொரு கடமையையும் முன்னெடுக்கவில்லை என சாட்சியம் அளித்தார்.

இதன்போது தேசிய வைத்தியசாலை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியாக பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை புரிகிறதா? என ஆணைக்குழு அவரிடம் வினவியது.

அதற் அவர் ´ஆம் புரிகிறது´ என பதிலளித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd