பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் குளவி தாக்குதல் பிரச்சினையிலிருந்து மீீீள்வதற்கு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்காலிக தீர்வு கட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
குளவி தாக்குதல் பிரச்சினையிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் முகமாக பெருந்தோட்ட கம்பெனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று (15) கொழும்பு ஹில்டன் விடுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் மற்றும் பெருந்தோட்ட கம்பெனிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது குளவி தாக்குதலிலிருந்து தொழிலாளர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அதன்போது தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய சிபாரிசுகள் சில முன்வைக்கப்பட்டன.
மேலும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளும் சில முன்மொழிவுகளை பரிந்துரை செய்தனர். முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்தி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் அறிவிப்பு கொடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று பெருந்தோட்டங்களில் குளவி தாக்குதல் பிரச்சனை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஓரிரு வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களது உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாது. தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இவ்வாறு நடந்தால் தொழிலாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டு அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அவ்வாறு நடப்பதற்கு முன்னர் அதனை தடுப்பதற்கு பெருந்தோட்ட கம்பெனிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி ஒருவித அசாதாரண நிலை ஏற்படக்கூடும்.
அத்தோடு நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களுடைய உழைப்பை வழங்கும் தொழிலாளர்களது உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். எனவே தொழிலாளர்களுடைய இந்த குளவி தாக்குதல் பிரச்சினைக்கு இன்று பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தற்காலிக தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக குளவி தாக்குதலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்குவதற்கு அனைத்து கம்பெனிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
முதலில் முழுமையாக தலை முகம் என்பவற்றை மறைக்கும் கவசம் வழங்கப்பட உள்ளதுடன் பின்னர் தலை உள்ளிட்ட உடல் முழுவதும் மறக்கக்கூடிய கவசம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.