இலங்கையிலுள்ள தமிழ் மக்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்தத் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள், யாரால் இனி முன்னெடுத்துச் செல்லப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வடக்கு, கிழக்கு, மேல்மாகாணத்தை இணைத்து, இந்தக் கூட்டணி, கடந்த வருடம் ஜூலை 12ஆம் திகதி, கொட்டகலை சி.எல்.எஃப்பில், உதயமானது.
இந்நிலையில், இந்தக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த மாதம் 12ஆம் திகதியுடன், ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை இணைந்தே, இந்தக் கூட்டணியை ஆரம்பித்திருந்தது.
இந்தக் கூட்டணியின் பொதுச் செயலாளர்களாக, இ.தொ.கா சார்பாக அனுஷா சிவராஜும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேஷனும், ஜனநாயக போராளிகள் சார்பில், இ.கதிரும், கூட்டணியின் பத்திரங்களில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இந்தக் கூட்டணி ஆரம்பிக்கப்படும் போது, ஒருசில வாரங்களில் பெயர் சூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றுவரை, இந்தக் கூட்டணிக்கு என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் காலத்தில், இந்தக் கூட்டணி செயற்படுமா, அவ்வாறு செயற்பட்டால், யார் தலைமைப் பொறுப்பை ஏற்பர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.