web log free
December 25, 2024

டிஜிட்டலுக்கு செல்கிறது பாராளுமன்ற அமர்வு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் பட்சத்தில் 09 ஆவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  

இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வொன்று பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவெல மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.  

இதன்மூலம் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பாராளுமன்றத்துக்கு வருகைதராமல் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஒன்லைன் மூலம் குழு அமர்வுகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். பாராளுமன்ற அமர்வுகளற்ற தினத்தில் நடைபெறும் குழு அமர்வுகளில் கூட உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு நேரடியாக சமுகமளிக்காது டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக குழு அமர்வுகளில் பங்கேற்கும் வகையில் இதனைப் பயன்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.  

இதற்கமைய 09ஆவது பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான யோசனையொன்றை முன்மொழியவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சுட்டிக்காட்டினார்.  

இதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பாராளுமன்றம் கூடிய பின்னரே கவனம் செலுத்தப்படவுள்ளது. சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது பாராளுமன்றத்தை சமூக இடைவெளியைப் பேணியே நடத்த நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பக்கத்து ஆசனங்களில் அமராது இடைவெளி விட்டே ஆசனம் ஒதுக்க நேரிடும் எனவும் சபாநாயகர் தெரிவு உள்ளிட்ட வாக்களிப்பின் போது 225 எம்.பிக்களும் பங்குபற்ற நேரிடுவதால் பொதுமக்கள் களரியையும் பயன்படுத்த நேரிடலாம் எனவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd