web log free
December 25, 2024

சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ஜீவன்

பொதுத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் வியூகம் வகுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று வெற்றிப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஜீவன் தொண்டமான் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரரான சௌமியமூர்த்தி தொண்டமானின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து ஆசிபெற்றனர்.

காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் மருதபாண்டி ரமேஷ், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் துரை மதியுகராஜா, கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி உட்பட இ.தொ.காவின் அனைத்து வேட்பாளர்களும் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்களுக்காக 32 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று ஆரம்பமாகும் சூறாவளிப் பிரசாரம், ஆகஸ்ட் 3 ஆம் திகதிவரை தொடரும் என காங்கிரஸின் பிரச்சாரக்குழு அறிவித்துள்ளது.

காங்கிரஸின் இளைஞர் அணி, மகளிர் பிரிவு, தொகுதி அமைப்பாளர்கள் என முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஜீவன் தொண்டமான் பங்கேற்று, காங்கிரஸின் எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார்.

அதேவேளை, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இ.தொ.கா. வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரதான பரப்புரைக் கூட்டங்களிலும் காங்கிரஸின் சார்பில் அதன்பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd