web log free
December 25, 2024

அப்பா சொன்ன இரகசியம் என்ன? - மனம் திறந்தார் ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுடைய பேரனாக தன்னை பார்க்காவிட்டாலும், கங்கானி கருப்பையாவுடைய கொள்ளு பேரனாக பார்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான மக்கள் சந்திப்பு இன்றைய தினம் பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் தேயிலை கொழுந்தினை பறிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோகிராம் அதிகமாக பறிக்க வேண்டும்.

இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் மேலதிகமாக ஒரு லீற்றர் பாலினை நாள் ஒன்றுக்கு அதிகம் பெற வேண்டுமென்ற நிபந்தனை ஒன்றை முன்வைத்தது. பெருந்தோட்ட நிறுவனங்களால் வைக்கப்பட்ட நிபந்தனைக்கு நாம் இணங்கவில்லை.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தெரியாது தேயிலை தோட்டங்களில் எந்தளவிற்கு தேயிலை கொழுந்து கானப்படுமென்று. அது தொழிலாளர்களுக்கு மாத்திரமே தெரியும்.

எனது தந்தை என்னிடம் கூறியதெல்லாம் தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயினை பெற்றுகொடுக்க வேண்டுமென, அவர் உயிரிழக்கும் முன்பு கூட அதைதான் என்னிடம் கூறினார்.

பொதுத்தேர்தலுக்கு பிறகு மக்கள் எனக்கு அதிகாரத்தை வழங்குங்கள். செளமியமூர்த்தி தொண்டமானுடைய சாணக்கியம், நிதானம், அதேபோல் ஆறுமுகன் தொண்டமானுடைய வீரத்தினையும், தைரியத்தையும் வைத்து மக்களின் உரிமைகளை என்னால் பெற்று கொடுக்க முடியும்.

ஆறுமுகம் தொண்டமான் மக்களை ஒற்றுமையாக இருக்குமாறுதான் வலியுறுத்தி வந்தாரே தவிர எனது கட்சிக்கு வருமாறு யாரையும் கூறியதில்லை. இறுதியில் அவர் இறந்த பிறகு தான் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அதனை பார்க்க இன்று அவர் இல்லை.

நான் ஆறுமுகம் தொண்டமானுடைய புதல்வனாக வந்து இங்கு வாக்கு கேட்கவில்லை. மலையகத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக வந்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்கிறேன்.மலையகத்தில் உள்ள சிலர் சம்பள பிரச்சினை, வீதி பிரச்சினை, வீடு பிரச்சினை போன்றதை பற்றிதான் விமர்சனம் செய்வார்கள். மக்களுக்கு வீடு என்பது அவசியம். ஆனால் அதற்கெல்லாம் பொருளாதாரம் முக்கியமான ஒரு விடயம்.

மலையகத்தில் இன்று எத்தனையோ இளைஞர்கள் கல்வியினை முடித்தும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வினை பெற்று கொடுக்க முன்வருவதில்லை.ஒரு பகுதியில் வீடமைப்பினை மாத்திரம் அமைத்து கொடுத்தால் போதாது அங்கு பொருளாதாரத்தினை தேடிக் கொள்ளும் வகையில் அதற்கான நடவடிக்கையினையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

ஆனால் இங்கு பசளையிடுவது போல் அங்கும் இங்கும் வீடுகளை தூவி விட்டிருக்கிறார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கு முதன் முறையாக ஒரு இளமையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது.மக்கள் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தால் எனது மக்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக எதிர்வரும் காலங்களில் இருப்பேன். இன்று மலையகத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட்டு துறையில் சாதனை படைத்துள்ளார்கள்.எனக்கு அதிகாரத்தை வழங்குங்கள் மலையகத்தை ஒரு சுற்றுலா பிரதேசமாக மாற்றி காட்டுகின்றோம் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd