தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது தெரியும். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு அது கூடுதலாகவே தெரியும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்
தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவதென்பது நகைச்சுவையானது என்றார்.
திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம் (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது’ தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது தெரியும். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு அது கூடுதலாகவே தெரியும். எனவே இதுகூட ஒரு தேர்தல்கால குண்டுதான். அடிக்கடி சேனாதிராஜா குண்டுகள் போடுவார் அந்த வகையான தேர்தல் குண்டாகவே இதனை கருதுகின்றோம்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெறுக்க தொடங்கியிருக்கின்றார்கள். அதற்கு ஆதரவளித்த மக்கள் பெரும்பாலும் அதிலிருந்து வெளியேறி மாற்று அணியாக விக்னேஸ்வரன் அணியை தெரிவு செய்து எங்களுக்கு ஆதரவை தந்து ஆதரவை பெருகிக்கொண்டிருக்கின்றது.
இந்த தேர்தலுடன் அவர்கள் மக்களுடைய அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என நாங்கள் கருதுகின்றோம்.’ – என்றார்.