கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
“தற்போது அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கருணா அம்மானின் கருத்து, கிரிக்கெட் போட்டியின் வெற்றி காட்டிக் கொடுப்பு ஆகியவற்றை குறிப்பிடலாம். ஆனால் மக்கள் உண்மையினையும் , தேவையானதையும் பிரித்து பார்க்க வேண்டும்.
கருணா அம்மான் விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை.
ஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்க ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர் மறந்து விட்டார்கள்.
2002ம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்க வழங்கிய விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.
கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது. ஆகவே அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சவால்களை வெற்றி கொள்ள மக்கள் பலமாக ஆணையினை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.