வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அது குறித்து இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக, மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியவை மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியன தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போதும் ஆராயப்படுமென அறியமுடிகின்றது.
சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டலுக்கமைய வாக்களிப்பு ஒத்திகைகள் இடம்பெற்றன. அதில், வாக்காளர் ஒருவர், தன்னுடைய வாக்கை அளிப்பதற்கு செலவிட்ட நேரம் தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் பார்த்தால், வாக்களிப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுவரையிலும் இடம்பெற்ற தேர்தல்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே வாக்களிப்புகள் இடம்பெற்றன.
இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில், காலை 6 மணியிலிருந்து 4 மணிவரைக்கும் அல்லது காலை 7 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் வாக்களிப்பை நடத்துவது தொடர்பிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.