இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள்.
1.”வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க என தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்த 212 மில்லியன் ரூபா எங்கே?’ என்று 28/6/20 ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்;
“சிறீதரன், சுமந்திரனை தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்ற செய்திகள் (மேற்படி 28/06 வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்)
(அ). இச் செய்திகள் தொடர்பில் நேற்றும் இன்றும் தமிழரசு மகளிர் அணித் தலைவர் திருமதி. மதனி, செயலாளர் திருமதி வளர்மதி ஆகியோர் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர்.
(ஆ) நேற்று (28/06) திரு.எம்.ஏ.சுமந்திரன் வேட்பாளர், மற்றும் திரு.சி.சிறிதரன் வேட்பாளர் இருவரும் மேற்படி செய்திகள் பற்றி என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்வாறு முறையிடப்பட்ட செய்திகளை யாழ்.ஊடகத்திற்குத் தாமாகவே, தன்னிச்சையாகவே திருமதி. விமலேஸ்வரியும் ஏனைய நால்வரும் சென்று வெளியிட்டுள்ளனர்.
அதனையடுத்தே அவர் உள்ளிட்ட ஐவர் நீக்கப்பட்டுள்ளனர் என இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.