web log free
May 10, 2025

5ஆம் திகதிக்குப் பின் மொட்டு கருகும்

ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நேற்று (03) கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது.

ஆனால், கடந்த 6 மாதங்களில் இவர்கள் செய்தது என்ன? கொரோனா விவகாரத்தில் சற்று காத்திரமாக செயற்பட்டிருந்தாலும் ஏனைய விடயங்களில் தோல்விகண்டுள்ளனர். அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது.

குறிப்பாக சிவில் நிர்வாகத்துக்கு பதிலாக இராணுவமயப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாது செய்யப்படும் எனவும் அறிவிப்பு விடுக்கின்றனர். தப்பிதவறியேனும் ராஜபக்ச தரப்பு ஆட்சிக்குவந்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். எனவே, நாட்டில் எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – என்றார்.

 
Last modified on Saturday, 04 July 2020 13:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd