ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச அணியினரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இந்தநிலையில், அவர்களின் மனதை மஹிந்த ராஜபக்ச எப்படி வெல்லப்போகின்றார்?
அவரின் அம்பாந்தோட்டைப் பேச்சு விசித்திரமாக இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூடடத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போது, 'தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களைப் புறக்கணிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். இதற்கு அவிசாவளையில் நேற்றுமுன்தினம் மாலை பதிலளித்து உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.