இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று (7) காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினமன்று பணி நிமிர்த்தம் இரு வைத்தியர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதன் போது இரு வைத்தியர்களின் மோதலினால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.
இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதி இல 5 இல் வைத்தியர் ஒருவரும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்தியரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.