பந்தையும், துடுப்பு மட்டையையும் வழங்கி வாக்கு கேட்பவர்களை நம்பவேண்டாம். இனவாதிகளுடன் இணைந்தே அவர் போட்டியிடுகின்றார். அத்தகையவர்களுக்கு வாக்களித்தால் மலையகத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் இன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.