இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்தில் ஐவரும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் கைதியொருவரும், பிலிப்பைன்ஸிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் உட்பட 670 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,023 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 111 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.