வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (21) காலை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேசங்கள் சிலவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உடுதும்பரயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர் கருத்து வெளியிடுகையில், வங்கிகளில் கடன் பெற செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் வகையில் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு உள்ள முறையை எதிர்வரும் காலங்களில் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாடசாலைகள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் ஒரே சம அளவிலான அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்டோம்.
2015ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்திகளை பின்நோக்கி கொண்டு சென்றது. கண்டிக்கு வரும் அதிவேக நெடுஞ்சாலையும் எங்கள் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் கண்டியை மறந்துவிட்டது.
எங்கள் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதிகளில் இதுவரையில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றது.
வெவ்வேறு உறுப்பினர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பகுதிகளை வழங்குவதே தாமதத்திற்கு காரணமாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் வெகு விரைவில் கண்டி வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.