ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று (20) இரவு சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என்று அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றோரு ஆயுள் கைதிக்கும் நளினிக்கும் தகராறு ஏற்பட்டது என்றும், இந்த தகராறு தொடர்பாக ஜெயிலர் அல்லிராணி சிறை கூடத்திற்கு வெளியே நின்றவாரே நளினியிடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.
இதன்போது மன வருத்தமடைந்த நளினி விசாரணை நடந்து கொண்டிருந்த போதே தூக்கு போட முயன்றுள்ளார் என்றும் தொடர்ந்து, ஜெயிலர் அல்லிராணி உள்ளே சென்று நளினியின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சட்டத்தரணி புகழேந்தி தெரிவிக்கையில், “இரவு 8:30 மணியளவில், ஜெயிலர் நளினியின் சிறைக்கு சென்று புகார் குறித்து விசாரித்தார். விசாரணையின் போது, ஜெயிலருக்கும் நளினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எனவே நளினி வருத்தமடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
இவ்வாறு சிறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் இதை நம்பவில்லை. அவர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இக்காலக்கட்டங்களில் அவர் தற்கொலைக்கு முயலவில்லை. சிறை அதிகாரிகள் நளினியை சித்திரவதை செய்ததாக நான் நினைக்கிறேன். எனவே இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” – என்றார்.
இதேவேளை தமிழக சிறைத்துறைத் தலைவர் சுனில் குமார் சிங் தெரிவிக்கையில், “இது பிளாக் மெயில் சம்பவம் போன்ற ஒன்று. அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.” – என்றுள்ளார்.