பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் எனக்கூறி, அவருக்கு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளார்.
மங்கள தனது ருவிட்டர் பக்கத்திலேயே மஹிந்தவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் மஹிந்த ராஜபக்ஷவை விடவும் தகுதி குறைந்த தலைவரா?
நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் அவதானிக்கின்றப்போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறை விடயமாக அல்லவா கருதப்பட வேண்டும்” என அவர் பதிவேற்றியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜலனி பிரேமதாசவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைமைக்கு அதிகளவானோர் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாகவும் இவ்விடயத்தை கண்டித்து மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது