web log free
December 26, 2024

நல்லூருக்கு இராணுவ பாதுகாப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து ஆலய வெளி வீதிக்கு வெளிப்புறமாக இராணுவத்தினர் சிலரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் பொலிஸார் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இதன் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd