web log free
December 26, 2024

ஸ்கூலுக்கு இப்படிதான் வரவேண்டும்

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த தரம் 1 உள்ளிட்ட அனைத்து தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்றைய தினம் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 அல்லது அதற்கு குறைந்த பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கொண்டதாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். அனைத்து பாடசாலைகளிலும் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமாயின் அனைத்து தரங்களை சேர்ந்த மாணவர்கனிள் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமாயின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள். தரம் 5 மாணவர்களுக்கு வாரத்தின் முழு நாட்களும் பாடசாலை நடத்தப்படுவதுடன் பாடசாலை கால எல்லையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அமைவாக பின்வரும் வகையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.

திங்கள்- தரம் 1 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
செவ்வாய்- தரம் 2 மற்றும் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
புதன்- தரம் 3 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வியாழன்- தரம் 4 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வெள்ளி- தரம் 4 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமான இரண்டாம் நிலை பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுவார்.

திங்கள்- 6,10,11,12 மற்றும் 13
செவ்வாய்- 7,10,11,12 மற்றும் 13
புதன்- 8,10,11,12 மற்றும் 13
வியாழன்- 9,10,11,12 மற்றும் 13
வெள்ளி- 9,10,11,12 மற்றும் 13

தரம் 6,7,8 மற்றும் 9 தரங்களுக்கான காலம் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1:30 மணி வரையும் தரம் 10,11,12 மற்றும் தரம் 13 வகுப்புக்களுக்கான கால எல்லை 7:30 தொடக்கம் 3:30 வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11, 12, 13ஆம் தர மாணவர்களுக்கே தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd