web log free
January 13, 2025

10 வருடங்களுக்கு ராஜபக்ஷ தசாப்தம்- விமல்

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத - பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம் பிடிப்பார். மாவட்டத்தையும் கைப்பற்றுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தலவாக்கலையில் நேற்று (29) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டு கூட்டணியே வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நுவரெலியாவில் காலநிலை மாறலாம். ஆனால், மொட்டை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற மக்களின் மனநிலை மாறாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாடுமீது பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவுசெய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர் ஜனாதிபதியானதால்தான் கொரோனாவைகூட எமது நாட்டில் கட்டுக்குள்கொண்டுவரமுடிந்தது. பழைய ஜோடி இருந்திருந்தால் (ரணில் - மைத்திரிபால) இந்நேரம் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, எமக்கு கிடைத்துள்ள சிறந்த தலைவரின் கரங்களை பலப்படுத்தவேண்டும். அவருக்கு தேவையான விதத்தில் அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமாகும். இந்த நாட்டை கட்டியெழுப்பும் தசப்பதமாகும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும். எனவே, காலாவதியான அரசியல்வாதிகளை பாராளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக்கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd