web log free
December 27, 2024

ராமர் கோயிலுக்கு அடிக்கல்லை நாட்டினார் மோடி

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ளது ராமர் கோயில். அடிக்கல்லை நாட்டினார் மோடி.

அயோத்தியில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல்லை நாட்டினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் திகதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் கட்டமாக, பிரதமர் மோடி அயோத்தி அனுமன் கார்ஹி கோவிலில் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் அங்குள்ள வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்றை நட்டுவித்தார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலின் மாதிரி வடிவம் கடந்த திங்கட்கிழமை வெளியானது. அதில் 3 அடுக்குகளை கொண்டு வடிவமைக்கும் கோயிலில் தூண்கள், மாடங்கள் காணப்படும். கோயிலின் உயரம் 161 அடியாகும்.

கொரோனா முன்னெச்சரிக்கை இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் அல்லாமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மோகன் பாகவத் உள்பட 50 விஐபிக்கள் சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டது. .

அயோத்தி பிரதமர் நரேந்திர மோடி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ஒருங்கிணைந்தவர்களில் மோடியும் ஒருவர்.

5 ஏக்கர் நிலம் 2.77 ஏக்கர் இடத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோயில் பூமி பூஜைக்கு இந்தியா முழுவதும் 2000 புனித தலங்களிலிருந்து மணலும், 100க்கும் மேற்பட்ட புனித ஆறுகளிலிருந்து தண்ணீரும் வரவழைக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd