குடும்ப தகராறு காரணமாக தனது சொந்த சகோதரியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 13ம் திகதி மன்னார் உப்பளத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதான டொறிக்கா ஜூயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து சிசிடிவி காணொளி கிடைத்துள்ளது.
இதில் உயிரிழந்த பெண்ணுடன், ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நெடுந்தீவை சேர்ந்த இரண்டு பெண்களே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செட்டிக்குளத்தில் வசிக்கும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் படி குறித்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், மன்னாருக்கு இன்று அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சகோதரியின் கணவருக்கும் கொல்லப்பட்ட பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார். இந்த சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையும் உயிரிழந்த நிலையில், தாயார் வெளிநாட்டில் உள்ளார். தாயின் சகோதரர் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர்.
இதனால் கொல்லப்பட்ட பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சில ஆவணங்களை கொழும்பில் கையளிக்க வேண்டும் என தெரிவித்து சகோதரிகள் இருவரையும், அவர்களது பெரியதாயின் மகனின் மனைவியையும் அழைத்துக்கொண்டு மன்னார் பயணித்துள்ளனர்.
மன்னார் நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் யாரும் இல்லையென்பதை அறிந்துகொண்டு, குறித்த இளம் பெண்ணை அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மாமன் கழுத்தை நெரிக்க, மற்றைய இரு பெண்களும் கால்களையும், கைகளையும் பிடித்து வைத்திருந்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்ததும் அந்த மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.