web log free
May 10, 2025

ராஜீவ் கொலை : வெளியானது புது தகவல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்கள் என்று எரிக் சொல்ஹெம் கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகள் மீது அவர் எந்தவித அன்பையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நார்வே 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அவ்வாறு ராஜீவ் காந்தியை கொலை விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் உலகிற்கு வெளிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்தது தாம் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்திருந்ததையும் டுவிட்டர் பயன்பாட்டாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எரிக் சொல்ஹெம், ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை ஆன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் தாம் அமைதியாக அதனை பார்த்துக்கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு தாம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தமிழ் பொதுமக்கள், தமிழீழ விடுதலைப் புலி வீரர்கள், பணியாளர்கள் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவுடன் தாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அந்த சந்தர்ப்பத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மறுத்திருந்ததாகவும் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு, சிறுபான்மை உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேலும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ே

அதற்காக வன்முறைகள் இல்லாமல் மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களை வெளியேற்ற பிரபாகரன் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பிரபாகரன் சமரசம் செய்ய தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

புத்திசாதுரியமான தீர்மானங்களை எடுத்து, மத்தியஸ்தர்களாக செயற்படவே தாம் விரும்பியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலம் வரை இலங்கைக்கான சமாதான நடவடிக்கைகளை நோர்வே முன்னெடுத்திருந்தது.

அந்த காலகட்டத்தில், சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெம் பணியாற்றி வந்தார்.

Last modified on Monday, 31 August 2020 01:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd