web log free
July 04, 2025

சஹ்ரான் தப்பிக்க இதுவே காரணம்!

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் ஒரு பயிற்சி முகாமை நடத்தி வந்த ஒரு விருந்தகத்தில் 2018 மே 8ம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் நுவரெலியா காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர்.

இதுவே காவல்துறையிடம் இருந்து சஹ்ரான் மற்றும் அவரின் நண்பர்களுக்கு காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க உதவியது என்று சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இந்த சாட்சியம் நேற்று வழங்கப்பட்டது.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவில் இணைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி எஸ்.ஐ.சஞ்சீவ இந்த சாட்சியத்தை வழங்கினார்.

நுவரெலியாவில் அமைந்திருந்த விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர் விருந்தகத்தில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான குழு ஒன்று குறித்து காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"சஹ்ரான் தனது பயிற்சி முகாமை நடத்தி வந்த விடுதியின் அருகில் வசிக்கும் திலகரத்ன இல்லசிங்க, என்பவர் நுவரெலியா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள முயன்றார்.

அவரது முயற்சி பயனற்றுபோனதால் அவர் காவல்துறை மா அதிபர் ஜயசுந்தரவிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்ததாக சாட்சி குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட சட்டமா அதிபரின் பிரதிநிதி எவ்வாறு குறித்த குடியிருப்பாளர் காவல்துறை மா அதிபரின் தொலைபேசி எண்களை பெற்றார் என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சாட்சியான காவல்துறை அதிகாரி, தாம் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து குடியிருப்பாளர் காவல்துறை மா அதிபரின் எண்ணை பெற்றக்கொண்டதாக கூறினார்.

நுவரெலிய விருந்தகத்தில் தங்கிருந்த குழுவினர் மற்ற விருந்தினர்களைப் போல அடிக்கடி வெளியே வரவில்லை என்றும், அவர்கள் காத்தான்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சில ஆயுதங்கள் மற்றும் பணம் குறித்து விவாதித்து வருவதாகவும் குடியிருப்பாளர் காவல்துறை மா அதிபரிடம் முறையிட்டிருந்தார்.

இந்த இரகசிய நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர் முறையிட்டிருந்தநிலையில் நுவரெலிய காவல்துறையை சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மாலை 4.00 மணியளவில் விடுதிக்கு சென்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

எனினும் அவர்களால் சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, "என்று சாட்சி ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இதனையடுத்தே சஹ்ரான் குழுவினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முடிந்தது என்று சாட்சி தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd