web log free
December 15, 2025

ஒருகால் இருந்தால் சாரதி அனுமதிப்பத்திரம்

எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது இரத்தப் பரிசோதனை செய்யப்படமாட்டாதென போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதானமாக எதிர்க்கால்தில் கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் கண் சற்று தெரியாவிட்டாலும், விரல் ஒன்று இல்லாவிட்டாலும் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சில நாடுகளில் ஒரு கால் இருந்தாலும் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படுகிறது

உண்மையாக வாகனம் செலுத்தும் போது ஒரு கால் இருந்தால் போதும். ஆனால் இங்கு காலில் ஏதும் சிறிய பிரச்சினை இருந்தாலும் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படுவதில்லை. இதனை மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

சகலருக்கும் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு செலவிடும் பணத்தை சேமிக்க முடியும். எதிர்வரும் காலங்களில் சீனி மற்றும் குருதி அழுத்தங்கள் தொடர்பான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இது நபரொருவர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதில் எந்த தாக்கமும் செலுத்தாது. விண்ணப்பதாரிகளுக்கு அறியப்படுத்துவதற்காக மாத்திரமே இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

விரைவில் பேட் பஸ் (Bad Bus) என்ற அப் ஒன்றையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். சட்டத்திற்கு விரோதமாக பஸ் ஒன்று செயற்பட்டால் குறித்த பஸ்ஸின் இலக்கம் மற்றும் புகைப்படமொன்றை அப் ஊடாக எமக்கு அனுப்பினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், பாரதூரமான காரணி என்றால் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd