web log free
January 09, 2025

அங்கஜனின் நிலைப்பாடு என்ன?

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது அரசியல் நாடகம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது வீழ்ந்த வாக்குச் சரிவை உயர்த்துவதற்காக உணர்ச்சி அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது இன்னொரு வெளிப்படையான அரசியல் நாடகம். அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. தேர்தலில் அவர்களுக்கு சரிவு ஏற்படுகின்றது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

கடந்த தேர்தலில் கூட்டமைப்பு, கூட்டணி எல்லாவற்றுக்கும் பின்னடைவும் ஏமாற்றமமும் தான். இவர்களை விட அதிகூடிய மக்கள் முன்னேற்றமான வாழ்க்கைக்கு தான் வாக்களித்துள்ளனர்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் அதே கோரிக்கைகள், சிந்தனைகள் இருக்கும். தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனைகளும் இருக்கும். அதற்காக எனக்கு வாக்களித்தவர்களுக்கு தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனை இல்லை என கூற முடியாது. ஆனால் இது அவசர தேவையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இந்த அவசர தேவையை பூர்த்தி செய்வதற்கு எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

அவர்களது ஒரேயொரு நோக்கம் சரிவடைகிற வாக்கை தூக்கி நிறுத்தவதற்காக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் இலாபத்தை அடைவதற்கான ஒரு நாடகமே.

அந்த நாடகத்திற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்துச் செய்கின்ற போது மீண்டும் மக்களிடத்தே நம்பிக்கையை ஏற்படுத்தி அனைத்து வாக்குகளையும் சூறையாடி மக்களுக்கு மீண்டும் ஏதும் செய்யாமல் இன்னமும் ஐந்து வருடம் காலத்தை விணாக்குவதற்கான முயற்சி. அந்த முயற்சி எதிர்காலத்தில் வெற்றிபொறாதென்று நம்புகிறேன்.

மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வைப் பெற வேண்டுமென்றால் அல்லது தமிழ் தரப்புக்கள் சொல்லுகின்ற விடயங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் ஒரு பேச்சுவார்த்தையூடாகத் தான் அந்த தீர்வை பெற முடியும்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை செய்வதற்கான முன்னேற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசி பேசி தான் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றோம் என்று சொல்லி அவர்களுக்கு முண்டு கொடுத்த அளவிற்கு இந்த அரசுடன் பேவதற்கான முயற்சியை கூட எடுக்கவில்லை.

ஆகவே மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுப்பதோ அல்லது தீர்வை பெற்றுக் கொடுப்பதோ அவர்களுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் தங்களுடைய அரசியலை அடுத்த கட்டம் கொண்டு செல்வதற்காகவே செயற்படுகின்றனர் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd