web log free
April 20, 2024

7 பேருக்கு பிணை

பொலிஸ் அதிகாரியொருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் உள்ளிட்ம 7பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்னர்.

எனினும், விபத்தை ஏற்படுத்திய டிப்பெண்டர் ரக வாகனத்தின் சாரதி, மார்ச் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றிருந்தது.

இந்த அனர்த்தத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் உள்ளிட்ட எட்டு பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், டிபென்டர் வாகனத்தின் சாரதியும் உரிமையாளரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

மாலபே, தலங்கம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நவிது ஒமோஷ் என்ற நபரே இந்த வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இளைஞனே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

அத்துடன் WP.FZ 9143 என்ற குறித்த டிபென்டர் வாகனத்தின் உரிமையாரான கொழும்பு 3, காலி வீதியை சேர்ந்த விசித ஶ்ரீ விஜேசேகர என்ற 27 வயதுடைய இளைஞனும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகனும் இருந்ததாக கூறப்பட்டது.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்துடன் பயணித்த பிராடோ ரக வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் வாகனத்தில் பயணித்த நபரும் நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 7 பேரை பிணையில் விடுத்த நீதிமன்றம், டிபென்டர் வாகனத்தை செலுத்திய சாரதியை மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.