அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான் வாக்கெடுப்பு, நாளை 22 மாலை நடைபெறவிருக்கிறது. அதுதொடர்பிலான விவாதம், நிதியமைச்சர் அலி சப்ரியினால், தற்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தத் திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
எனினும், ‘149+ நம்பர்’ சரிக்கட்ட கடைசி நேர பிரயத்தனம் நடைபெறுகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இது ‘சிங்கள-பெளத்த அரசு’ மட்டுமே என்ற மாதிரி கொள்கை பிரகடனம் செய்தவர்கள், இப்போ தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் தேடுகிறார்கள். அப்போ, இது, சிங்கள, தமிழ் முஸ்லிம் இணைந்த இலங்கை அரசாக’ மாறிவிடுமே..! என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இப்படி கொள்கை மாற்றம் நடந்தால் நல்லதுதான். அதை நான் விரும்புகிறேன். ஆனால், அதற்கு என்ன உத்தரவாதம்? என்னவென கேட்டுள்ளார்.
இப்படி நம் எல்லோருக்கும் சொந்தமான ‘தாய்நாட்டு இலங்கை அரசை’ பகிரங்கமாக அறிவியுங்கள். இது நடந்தாலும் எனக்கொரு பதவியும் வேண்டாம்.
அரசுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு 23ஆம் திகதியே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று கண்காணாத தேசத்துக்கு போய் விடுவேன்.
அல்லது...., 20ஆவது சட்டமூலத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு, உடனடியாக புதிய அரசியலமைப்பு முயற்சியை துரிதப்படுத்துங்கள். அனைத்து இன, மத, மொழி, சமூக பிரிவினரையும் கலந்துரையாடலில் இணையுங்கள்.
சிங்கள மக்களின் அதிகூடிய ஆதரவை பெற்ற உங்களால்தான் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முடியும். நாம் ‘வெனிஸ் நகர வியாபாரியை’ போல் முழு இறாத்தல் இறைச்சியையும் கேட்க மாட்டோம்.
என்று என்னுடன் பேரம் பேசிய அரச நண்பர்களிடம் சொன்னேன்..!இவர்கள் அவசரத்துக்கு ஆள் தேடுகிறார்களே தவிர, கொள்கை மாற்றம் செய்தல்ல. கனவுக்கும், யதார்த்தத்துக்கும் வெகு இடைவெளி.
இப்போது அரசின் உள்ளே இருக்கும் சிறுபான்மையினரை பார்த்தால், யதார்த்தம் புரிகிறது. உள்ளே இருக்கும் சில தமிழ், முஸ்லிம் நபர்களை, சும்மா சோளக்கொல்லை பொம்மைகள் மாதிரி அல்லவோ, வைத்திருக்கிறார்கள்..!
இந்த நபர்களும், ‘அரை-தேசிய’ தமிழ் பத்திரிக்கைகளில், பேசும், காட்டும் ‘படத்தை’, அரசுக்கு உள்ளே காட்டுவதில்லையே..!
நாம் கடந்த நல்லாட்சியில் இப்படி சும்மா இருக்கவில்லையே. எதிர்கட்சிக்கு வேலை இருக்கவில்லை. ஆளும்கட்சி என்பதை மறந்து, நாமே ஒவ்வொரு நாளும், அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும், கட்சி தலைவர் கூட்டங்களிலும், சண்டையிட்டபடிதானே பல விஷயங்களை செய்தோம்.
நேர்மை, உண்மை, நாட்டுப்பற்று, இனப்பற்று ஆகியவற்றுடன், சலனங்களுக்கு இடம் கொடுக்காமல் கொள்கைப்பற்றுடன் செயற்படும் தமிழ் முற்போக்கு கூட்டணியை பற்றி எழுதுவதை, காட்டுவதை நிறுத்தி விட்ட ‘அரை-தேசிய’ தமிழ் பத்திரிக்கைகளும், இந்த ‘ஒன்றுமில்லாதவர்களை’ பற்றி ‘ஆஹா, ஓஹோ’ என்று எழுதி ‘படம்’ காட்டுகிறார்கள்.
திருவிழாவில் எல்லோரும் சேர்ந்து ‘கோவிந்தா’ கோஷம் போடுவது என்பது இதைதான்.
பக்தைகளின் தாலிக்கொடியை, அறுத்து, பிடுங்கி, திருடிக்கொண்டு ஓடும் திருடனும், ‘கோவிந்தா’ என்ற கூப்பாடு போட்டுக்கொண்டு ஓடுவான்/ள். எல்லோரும் சேர்ந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என கூப்பாடு போட, அது காதை பிளக்கும்.
இதற்குள் தாலிக்கொடியை பறிகொடுத்த அப்பாவி பக்தையின், ‘ஐயோ, திருடன், திருடன்..’ என்ற குரலொலி கேட்காது. ஆனால், அது வரலாற்றுக்கு கேட்கும்..! என்றும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.