அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான டயனா கமகே, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களான நஷீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், ஏ.அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு ஆதரவாக வாக்களித்தனர்.
அரவிந்தகுமார் பல்டி
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றான மலைய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.அரவிந்தகுமார், திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களான மனோ கணேசன், பி.திகாம்பரம், வேலுகுமார், வே.இராதா கிருஷ்ணன், உதயா மற்றும் வேலுகுமார் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
ஆதரவாக 156 வாக்குகள்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன.
மூவர் வாக்களிக்க வரவில்லை
சபையில் இன்று (22) நடைபெற்ற , அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்புக்கு மூவர் வருகைதரவில்லை.
அதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகமளிக்கவில்லை.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினரும் எமது மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டிய தேசியப் பட்டியல் எம்.பியும் இதுவரையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவில்லை. அதனால், மூன்று உறுப்பினர்கள் இன்றைய வாக்கெடுப்புக்கு சமூகமளிக்கவில்லை.