வங்கியொன்றின் தன்னியக்கக் கூண்டுக்குள், பணத்தை மீளப்பெறுவதாகக் சென்றிருந்த யுவதியின் பின்னாலே சென்று, அந்த யுவதியை கட்டியணைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், மஸ்கெலியா நகரத்திலுள்ள வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ள கூண்டிலேயே நேற்று (01) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
31 வயதான யுவதி, அந்தக் கூண்டுக்குள் நுழைந்தபோது, குறித்த இளைஞனும் கூண்டுக்குள் பலவந்தமாக நுழைந்து, அந்த யுவதியைக் கட்டிப்பிடித்து, அங்கங்களையும் இறுக்கப்படித்துள்ளார். அப்பெண் கூச்சலிடவே, அங்கிருந்து அவ்விளைஞன் தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பில், பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சிசிரீவி கமெராவைச் சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், மஸ்கெலியா லக்ஷ்பான தோட்டம், வாழைமலைப் பிரிவைச் சேர்ந்த 28 வயதான இளைஞனை, சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பண்டாரவின் பணிப்புரையில் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி சுபேசன் தலைமையிலான குழுவினரே, விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராம் ஸ்ரொஸ்கியின் முன்னிலையில், நாளை (03) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.