வட்ஸ்அப் தகவலின் மூலம் திறன்பேசிகளில் தீம்பொருள் (Malware)நிறுவப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலவச டேட்டா வழங்கும் போர்வையில் வரும் தகவலுடன் வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், அதை 20 அல்லது அதற்கு மேற்பட்ட பிற சமூக ஊடக பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தனிப்பட்ட விவரங்களை கோருவதுடன், இதனை செய்வதன் ஊடாக அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச டேட்டாவை பெறலாம் என்று அந்த தகவலில் கூறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்த செய்தியை எந்த ஆய்வும் இல்லாமல் தங்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகின்றது.
இதன் விளைவாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த மோசடிக்கு ஆளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செய்திகள் ஊடாக திறன்பேசிகளில் தீம்பொருளை (Malware) நிறுவுவதற்கும், முக்கிய தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை திருட வாய்ப்பளிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.