web log free
January 10, 2025

விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்"

ஆன்லைன் விளையாட்டுகளால் தேசிய அளவில் ரூ.25 ஆயிரம் கோடி புழங்குவதாக திடுக்கிடும் தகவலை அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. இந்த விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், மக்கள் நலனை கருதாமல் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புகிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி

பின்வரும் தகவல்கள் அந்நாளிதழ் செய்தியில் இடம்பெற்றுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, " கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இணைய தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் பலதரப்பட்டவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி, பலர் தங்களின் எதிர்காலத்தை சீரழித்துக்கொள்கின்றனர். சமீபத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிர்ப்பலிகளை தடுக்க ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், துஜா ஆகியோர் ஆஜராகி, "சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் பல லட்ச ரூபாயை இழந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை போல ஏராளமானவர்கள் தங்களின் மதிப்பு மிக்க உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். எனவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது அவசியம்" என்றனர்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், "பிரபலமானவர்கள் விளம்பரங்களில் பங்கேற்கும்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்களை பின்பற்றுகின்றனர் என்று தெரிந்தும் இவ்வாறு செய்வது ஏன்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd