அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான தகுதியை பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவராக கணிக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கும் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த இருவர் இணைக்கு ஆதரவாக தேர்தல் சபை வாக்குகள் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் 279 என்ற அளவில் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தகுதி பெறத் தேவையான 270 என்ற எண்ணை கடந்து விட்ட ஜோ பைடனுக்கும் அவரது தலைமையிலான அரசில் துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எனது நண்பர்களான அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்று தொடங்கி, நமது ஜனநாயகத்துக்கு முன்பை விட தற்போதுதான் நாம் அனைவரும் அதிகமாக தேவைப்படுகிறோம் என்று நிறைவு செய்து வாழ்த்து மடலை ஒபாமா எழுதியிருக்கிறார்.