web log free
January 10, 2025

17ஆம் திகதி பட்ஜெட்

 

2020 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற அமர்வை முற்பகல் 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (09) தீர்மானித்தது.

இதற்கமைய முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் மூன்றாவது வாசிப்பு ஆகியன இடம்பெறும். அதனையடுத்து பிற்பகல் 5 மணி முதல் 8 மணிவரை நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் யோசனை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்வியை எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்படாது என்பதுடன், மதியபோசன இடைவேளைக்காகவும் விவாதம் இடைநிறுத்தப்படாது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி கௌரவ நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்படும்.

கொவிட் நெருக்கடி காரணமாக வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் குழுநிலை என்பவற்றை 11 நாட்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டபோதும், விவாதத்துக்கு முழுமையான தினங்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

இதற்கமைய வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் குழுநிலை என்பவற்றுக்கான தினங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென்பதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தை நடத்தி இதுபற்றித் தீர்மானிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியப்பலாப்பிட்டிய, சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச மற்றும் சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் கிரியல்ல, கயந்த கருணாதில, அநுரகுமார திஸாநாயக்க, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd