கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் இறுதி வாரத்திலேயே முதல் தடவையாக இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக சுமார் இரண்டு மாதங்கள் சமூகத்திற்குள் கொவிட் தொற்று பரவி வந்த நிலையில், அரசாங்கம் அதனை முழுமையாக கட்டுப்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தியிருந்தவர்களே கொவிட் தொற்றினால் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார்.
அன்று முதல் தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுவது அதிகரித்திருந்தது.
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில், இலங்கை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 146ஆவது இடத்தில் இருந்தது.
எனினும், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் இன்று வரையான 37 நாட்களில் இலங்கை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 102ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 14715 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9537 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ள பின்னணியில், இன்று வரையான காலம் வரை 41 கொவிட் உயிரிழப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,