web log free
January 10, 2025

தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி அதிரடி அறிவுரை

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் போது அவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பதற்கும் கொவிட் நோய்த்தொற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் விசேட செயலணியுடனான சந்திப்பு இன்று (11) முற்பகல் இடம்பெற்றது. இதன் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தின் போது கொவிட் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் எழக்கூடிய வைரசுடன் தொடர்புடைய நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஆராயப்படவேண்டிய துறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரதான வைத்தியசாலைகளுக்கு வருவதில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இனம்கண்டு ஒரு காலத்தில் நாடுபூராகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேச மருந்தகங்களை (டிஸ்பென்சரி) உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அதற்குத் தேவையான மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய பணிக்குழாமினரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படும் தரப்பினர் சரியாக நடைமுறைகளை பேணுகின்றனரா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அப்பிரதேசங்களிலிருந்து உட்செல்வதற்கோ வெளியேறுவதற்கோ எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

சிறைச்சாலைகளின் நிலைமைகள் மற்றும் நோய்ப்பரவலை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

கொவிட் நோய்த்தொற்றுடையவர்கள் அதிகம் இனம்காணப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,  பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமனாத் சீ தொலவத்த, பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் செயலணி உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 

Last modified on Wednesday, 11 November 2020 17:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd