ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்ட சில மணிநேரத்துக்குள் அந்த உத்தரவை, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அமுல்படுத்தினார். இதனால், விடுமுறைகள், தீபாவளிக்கு வெளிமாவட்டங்களுக்கு செல்விருந்த சகலரும் கொழும்பிலும் மேல் மாகாணத்திலும் முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படும் தரப்பினர் சரியாக நடைமுறைகளை பேணுகின்றனரா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அப்பிரதேசங்களிலிருந்து உட்செல்வதற்கோ வெளியேறுவதற்கோ எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணித்திருந்தார்.
அந்த பணிப்புரைக்கு அமைவாக, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அதிரடியான முடிவுகள் சிலவற்றை எடுத்தார்.
அதன்பிரகாரம். மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு 15ஆம் திகதிவரை எவரும் செல்ல முடியாதென இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகள, எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ரயில்கள் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.