web log free
January 10, 2025

சீனாவிடம் அச்சொட்டாக சொல்லிவிட்டார் கோட்டா

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று (19) முற்பகல், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார்.

அதைத் தொடர்ந்து, சீன தூதுவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பரஸ்பர நன்மையுடன் கூடிய நிலையான ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி, “ பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு, இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, சீனா பெரிதும் உதவியது. கொழும்பு துறைமுக நகரம், ஹம்பான்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவை அவற்றில் சிலவாகும். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பை சிலர் விமர்சித்தனர். இந்தத் திட்டங்கள் பயனற்றவை என்பது அவர்களின் வாதம். உண்மை அதுவல்ல. சீனாவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எனது பதவிக்காலம் முடிவதற்குள் இந்த திட்டங்களின் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்” என்று தெரிவித்தார்.

இலங்கை அதன் அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, முதலீட்டை ஈர்ப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

"எமது நாட்டில் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. விவசாயம், தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அவற்றில் முக்கியமானவை. இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 30 வீதமானவர்களின் வாழ்வாதாரம் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக சீனா அடைந்துள்ள கிராமிய அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது முக்கிய குறிக்கோள். அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள்” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்த சீன தூதுவர் கியி சென்ஹோங், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க தனது அரசாங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd