பாராளுமன்றத்தில் வெற்றிடமாக காணப்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஒருவரை நியமிக்கின்றமை குறித்து, தொடர்;ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது.
பாராளுமன்றம் கூடி ஒரு மாதத்திற்கும் அதிக காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவம் இன்றி, பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாராளுமன்றத்திற்கு, ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்துள்ளதாக அறிய முடிகின்றது.
தனது பெயர் முன்மொழியப்பட்டுள்ள போதிலும், ரணில் விக்ரமசிங்க இதுவரை எந்தவித பதிலையும் வழங்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்துரைக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இறுதித் தீர்மானத்தை செயற்குழுவே எட்டும் என கூறினார்.
செயற்குழுவில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் கிடையாது என்பதனால், பாராளுமன்றத்திற்குள் நிச்சயமாக அவரே செல்வார் எனவும் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்தவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு செல்வார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.